குடும்பம் இல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையில் அமைதியோ, வெற்றியோ இல்லை. வேறு எந்த விதத்தில் வெற்றியோ, மகிழ்ச்சியொ வந்தாலும் குடும்பமின்றி அதை அனுபவிக்க முடியாது. அவற்றை அனுபவிப்பது, பாதுகாப்பது எல்லாம் குடும்பத்தில் தான் இருக்கிறது.
இல்லறத்தில் கணவன்-மனைவி உறவு மிகமிக மதிப்புடையது. அது சாதாரணமாக ஏதோ ஒருவருக்கொருவர் ஒத்துக்கொண்டு வாழ்வது அல்ல.
நீண்டகாலத் தொடராக வந்த வினைப்பயனாக-அதாவது நல்வினையானாலும், தீவினையானாலும் அவை தொடர்பாக காலம் முழுவதும் அனுபவித்துத் தீர்ப்பதற்கான தொடர்பு ஆகும். இந்தத் தொடர்பை நல்வினைத் தொடராகவே மாற்றிக் கொள்ளலாம். ஏதேனும் குற்றம் அல்லது குறை இருந்தாலும் கூட ஒருவருக்கொருவர் உணர்ந்து, ஒத்துப் போகக்கூடிய அளவில் மாற்றிக் கொள்ளலாம். அதற்குச் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்று தன்மைகள் வேண்டும்.
காலையில் எட்டு மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். இன்னும் உணவு தயாராகவில்லை. உணவு வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள், நேரம் கடந்து கொண்டிருக்கும், கொஞ்சம் சகித்துக் கொண்டால் போதும். இங்கே உணவ ஆகவில்லை. எட்டு மணிக்கு அலுவலகம் போக வேண்டும். அலுவலகத்தில் உள்ள கடையில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போகலாம். இவ்வாறு விட்டுக் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை.
___
கேள்வி: இன்றைய கால மாணவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இதிலிருந்து தெளிவு பெறுவது அதாவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வேதாத்திரி மகரிஷி: மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி. அதுவும் மனவளக்கலையில் சேர்ந்துதான். அதைச் செய்தால்தான் மாணவர்களினுடைய மனநிலை சரியாக, தெளிவாக இருக்கும். மேலும் மேலும், முயற்சி விடா முயற்சி நன்மை தரும்.
எண்ணம்
எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பி என்றால் அது மிகையில்லை.
சிந்தனை
இயற்கையை நுணுகி, அதனுடைய அமைப்பை, இயக்கத்தை, இயக்க ஒழுங்கை, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை, அறிந்து கொள்ளக் கூடிய ஒரு திறன் ஆர்வம், செயல் இது தான் சிந்தனை.
அன்பு
அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு. அன்பு வேறு சிவம் வேறு அல்ல. சிவத்தை உணர்ந்ததால் அன்பாக மலர்ந்தது.
சினம்
பிறர் மீது சினம் கொள்ளும்போது, அந்தக் குறைக்கு உங்களிடம் தவறு உள்ளதா என்று முதலில் பாருங்கள்.
துன்பம்
மனிதனின் துன்பமெல்லாம் இயற்கையை அறியாமலும், அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன.
அறநெறி
திருந்திய செயல்களினால் இன்ப துன்பங்களையும், அதன் அளவுகளையும் மாற்றியமைத்துக் கொள்கின்ற செயல் திறமைகளே அறநெறி.
வேண்டுவதும், கிடைப்பதும்
நீ புகழை விரும்புவாயேல், அந்தப் புகழ் வேட்பே நீ விரும்புகின்ற புகழை விரட்டுகின்ற சாட்டையாகும்.
அகத்தவம்
அகத்தவம் தீவினை அகற்றும் அருள் நெறியை இயல்பாக்கும்
அகத்தவமே இறைவழிபாடு அனைத்திலும் ஓர் சிறந்த முறை
அகத்தவமே உயிர்வழிபாடு அதனை விளக்கும் ஒளியாம்
அகத்தவமே மதங்கள் எல்லாம் அடைய விரும்பும் முடிவு
தற்பெருமை
தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச சோதிக்க வாயப்பாம்.
வாழ்த்து
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.
"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.
வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.
வாழ்த்து அலை
வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)
ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.
வாழ்த்தின் நன்மை
1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.
2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.
3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.
4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.
+ அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment